நிலக்கடலையைப் பொருத்தவரை பயன்படுத்தப்படும் விதைகளுக்கு குறைந்தபட்சம் 70 சதவிகிதம் முளைப்புத்திறனும், 96 சதவீதம் புறத்தூய்மையும் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் விதைகளில் 4 சதவீதம் மட்டுமே கல், மண், தூசிகள் இருக்கலாம். பிற இனப்பயிர் விதைகள், பிற ரக விதைகள் ஒன்றுமே இருக்கக்கூடாது. மேலும் விதையின் அதிகப்பட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்கவேண்டும்.
நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. எனவே நல்லத் தரமான சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்பு செய்யும்போது ஏக்கருக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 333 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து உயர் விளைச்சல் பெறலாம்.ரகங்களும், குணங்களும்:
கார்த்திகைப் பட்டத்தில் டி.எம்.வி.7, கோ.3, கோ.(ஜி.என்)4, வீ.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, ஏ.எல்.ஆர்.3, வீர்.ஆர்.(ஜிஎன்) 5, வி.ஆர்.(ஜின்-6), டி.எம்.வி.(ஜின்.13), டிஎம்வி-(ஜின்)14, வீஆர்ஐ-8 ஆகிய ரகங்கள் பயிரிட உகந்த ரகங்களாகும். மேலும் இந்த ரகங்களின் குணங்களை அறிந்து தேர்வு செய்து அதற்கேற்ப சாகுபடி முறைகளைப் பின்பற்றவேண்டும்.
டி.எம்.வி.7 ரகம் 105 நாள்கள் வயதுடைய வறட்சியை தாங்கி வளரக்கூடிய கொத்து வகையைச் சேர்ந்தது.
கடந்த 44 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது டென்னஸி என்ற ரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகமாகும். இதன் காய்களின் பின்பகுதி ஒட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக் கொண்டு இந்த ரகத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். இது 74 சதம் உடைப்புத் திறனும், 49.6 சதம் எண்ணெய் சத்தும் கொண்டது. வெளிறிய சிவப்பு நிற விதைகளைக் கொண்ட இந்த இரகத்தின் 100 விதைகளின் எடை 36 கிராம் ஆகும்