கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி

கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் விதை தரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப்பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன்,


திருவாரூர்  விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி  ஆகியோர் தெரிவித்திருப்பது: 



பொதுவாக கார்த்திகை பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்துக்குள் விதைப்பு செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அளிக்கிறது.


இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது போதிய மழை, சரியான தட்பவெப்பநிலை சாதகமாக இருப்பதால், அதிக மகசூல் பெறப்படுகிறது.மணிலா உற்பத்தியால் அதிக மகசூலை பெற அந்த பகுதிகளுக்கு ஏற்ற குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து அந்த ரகங்களின் தரமான விதைகளைப் பயன்படுத்துவது முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். 



அதிகபட்ச இனத்தூய்மையும், மண் தூசி பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காமலும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியை தரவல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும்.